
கொழும்பு, மே-4- ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்களில் 6 பேர் சென்னை வழியாக விமானத்தில் இலங்கை வருவதாக இந்தியா கொடுத்த உளவுத் தகவலை அடுத்து, கொழும்பு விமான நிலையத்தில் நேற்று நண்பகலில் மாபெரும் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
சனிக்கிழமை காலை 11.59 மணிக்கு பண்டாரநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸின் UL122 விமானம், கடும் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
இலங்கை போலீஸ், ஆகாயப் படை, விமான நிலையப் பாதுகாப்புப் படை மூன்றும் ஒருங்கிணைந்து அச்சோதனையை மேற்கொண்டன.
ஆனால் சந்தேக நபர்கள் எவரும் சிக்கவில்லை.
முழு பரிசோதனைகளுக்குப் பிறகு பாதுகாப்பு உத்தரவாதம் கிடைத்ததும், அவ்விமானம் அடுத்தப் பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இந்தியாவின் அதிகாரத்திற்குட்பட்ட ஜம்மு – காஷ்மீர் பகுதியின் பஹல்காம் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு நேப்பாள சுற்றுப்பயணி உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட TRF கிளர்ச்சிப் படை அதற்கு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அத்தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானே இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது.
இதையடுத்து பாகிஸ்தானுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை புது டெல்லி குறைத்துள்ளது அல்லது நிறுத்தி வைத்துள்ளது.
அவ்வகையில் பாகிஸ்தானிலிருந்து வரும் நேரடி அல்லது நேரடி அல்லாத இறக்குமதிகளுக்குத் தடை விதித்ததோடு, அங்கிருந்து பார்சல்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
சில பொருட்கள் மூன்றாம் நாடுகள் வாயிலாக இந்தியாவுக்குள் நுழைவதால், இந்த அதிரடி உத்தரவு பறந்துள்ளது.
பாகிஸ்தானுடனான நில எல்லையான அட்டாரி – வாகாவையும் இந்தியா மூடியுள்ளதால் இருவழி வர்த்தகம் ஸ்தம்பித்து போயுள்ளது.
பாகிஸ்தானியக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களில் நங்கூரமிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.