குவாந்தான், அக்டோபர்-19 – பஹாங் சுல்தான், அல் சுல்தான் அப்துல்லாவின் பெயரில் பல்வேறு சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
அல் சுல்தான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சமூக ஊடகங்களில் கணக்கேதுமில்லை.
அவரின் உரையோ, அல்லது பஹாங் அரச குடும்பம் பற்றிய செய்தியோ, எதுவாக இருந்தாலும் Kesultanan Pahang என்ற அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கங்களில் மட்டுமே வெளியிடப்படுவதாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வேளையில், பஹாங் சுல்தானின் துணைவியார் துங்கு அசிசா அமீனா மைமூனாவுக்கு, இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டோக்கில் மட்டுமே தனிப்பட்ட கணக்குண்டு.
தெங்கு அம்புவான் பஹாங் என்ற பெயரில் அவ்விரண்டு கணக்குகளும் செயல்பட்டு வருகின்றன.
அதே சமயம் பஹாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹாசானால் இப்ராஹிமுக்கு, இன்ஸ்டாகிராமில் this.7 என்ற பெயரில் ஒரே ஒரு சமூக ஊடகக் கணக்கு மட்டுமே ஊள்ளது.
எனவே, பஹாங் ஆட்சியாளர்கள் பெயரில் உலாவும் போலி சமூக ஊடகக் கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதோடு, பார்ப்பதை நம்பி எளிதில் ஏமாற வேண்டாமென்றும் நினைவுறுத்தப்பட்டுள்ளது.