பாகிஸ்தானில் முற்றுகையிடப்பட்ட இரயிலில் இருந்து 25 சடலங்கள் மீட்பு

மச், பாகிஸ்தான், மார்ச்-13 – பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய பிரிவினைவாத கும்பலால் இரயில் சிறைபிடிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட 21 பிணைக் கைதிகள் உட்பட குறைந்தது 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
முதல் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவிருக்கும் நிலையில், சம்பவ இடத்திலிருந்து அவை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்தவர்களில் 19 இராணுவப் பயணிகள், ஒரு போலீஸ்காரர் மற்றும் ஒரு ரயில்வே அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளனர்; 4 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கையில் 340-க்கும் மேற்பட்ட இரயில் பயணிகளையும் பாதுகாப்புப் படையினர் விடுவித்துள்ளனர்.
முன்னதாக, மலைப்பாங்கான தென்மேற்கு பலூசிஸ்தானில் ஒரு பிரிவினைவாதக் கும்பல் தொலைதூர இரயில் பாதையில் குண்டுவீச்சு நடத்தி, சுமார் 450 பயணிகளுடன் அந்த இரயிலை சிறைபிடித்தது.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லைகளுக்கு அருகிலுள்ள பலூசிஸ்தானில் இயற்கை வளங்களை வெளிநாட்டினர் சூறையாடியதாக குற்றம் சாட்டும் பல பிரிவினைவாத கும்பல்களில் ஒன்றான பலூச் விடுதலை இராணுவம் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு பாதுகாப்புப் படை இரயிலை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது.