
பாச்சோக், டிச 3 – கிளந்தான், பாச்சோக்கில் (Bachok) வெள்ள நீர் செந்நிறமாக மாறியிருக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
நேற்று முந்தினம் கம்போங் தெலகா படாவிற்கு அருகிலுள்ள தனது வீட்டு முற்றத்தில் வெள்ள நீரின் நிலைமையை அசாம் ஜூசோ ( Azam Jusoh ) என்பவர் டிக் டோக் கில் பகிர்ந்து கொண்டார்.
தனது வீட்டிற்கு அருகிலுள்ள தொழிற்சாலையின் SOS வர்ணம் வெள்ள நீரில் மாசுபட்ட சூழ்நிலையை 9 வினாடிகளைக் கொண்ட அந்த காணொளியில் காணமுடிவதாக அசாம் ஜூசோ தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த வட்டாரத்தில் செந்நிற வெள்ளம் மீண்டும் ஏற்பட்டுள்ளது என்ற கவலை மக்களிடையே ஏற்பட்டது.
செந்நீர் வெள்ளம் மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என பலர் கருத்துரைத்தனர், 1926 ஆம் ஆண்டு கிளந்தானில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளப் பேரிடரை நினைவுறுத்தும் வகையில் வெள்ள நீர் செந்நிறமாகியிருப்பதை பிரதிபலிப்பதாக சிலர் நினைவு கூர்ந்தனர்.
நீர் பெருக்கம் வெள்ளத்தில் கலந்ததைத் தொடர்ந்து அப்போது வெள்ள நீர் செந்நிறமானது .
இதனிடையே கிளந்தானில் முதல் கட்ட பேரிடர் தற்போது சீரடைந்து வருவதால் பாதிக்கப்பட்ட 34,200 பேர் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். நேற்று முதல் அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வானிலை சீரடைந்துள்ளது.