
கோலாலம்பூர், மார்ச்-17 – பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் முயற்சியில், பாத்திக் ஏர் விமான நிறுவனம் தனது power bank கொள்கையைப் புதுப்பித்துள்ளது.
அவ்வகையில் பயணிகள் இனி அதிகபட்சமாக 2 power bank கருவிகளை மட்டுமே விமானத்தினுள் எடுத்துச் செல்ல முடியும்; அதுவும் அவற்றை எப்போதும் தங்களுடனேயே வைத்திருக்க வேண்டும்; carry-on baggage பைகளில் வைக்கக்கூடாது.
அனைத்து பாத்திக் ஏர் விமானங்களிலும், சரிபார்க்கப்பட்ட பயணப் பெட்டிகளில் power bank கண்டிப்பாக தடைச் செய்யப்படுவதாக, இன்று வெளியிட்ட அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்புதியக் கட்டுப்பாடுகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன.
அவ்விதிமுறைகளின் படி, விமானத்தினுள் எடுத்துச் செல்லப்படும் power bank கருவிகள், 100 வாட்-மணிநேரம் (Wh) அல்லது 20,000 மில்லியம்பியர்-மணிநேரத்தை (mAh) விட அதிகமாக இருக்கக்கூடாது.
இவ்வேளையில், தானியங்கி-காந்த சார்ஜ் power bank கருவிகள் கூடுதல் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை எடுத்துச் செல்லும்போது பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்புதியக் கட்டுப்பாடுகள் சுமூகமாக அமுலுக்கு வருவதை உறுதிச் செய்வதற்காக, check-in முகப்புகளில் பாதுகாப்பு நினைவூட்டல்கள் காண்பிக்கப்படும்; புறப்பாடு அறிவிப்புகள் மற்றும் விமானத்தினுள் விளக்கமளிப்பின் போதும் மீண்டும் நினைவூட்டல் விடுக்கப்படும்.
power bank கருவிகள் நல்ல நிலையில் உள்ளதா மற்றும் வாட்-மணிநேர (Wh) வரம்புகளுக்கு உட்பட்டதா என்பதை உறுதிப்படுத்த, பயணிகள் விமானத்தில் ஏறும் முன்பே check-in பணியாளர்கள் பரிசோதிப்பர்.
தடையற்ற பயண அனுபவத்தை வழங்கும் அதே நேரம், மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தை நிலைநிறுத்துவதிலும் தாங்கள் உறுதியாக இருப்பதாக பாத்திக் ஏர் கூறிற்று.