
கோலாலம்பூர், செப் 10 – விளையாட்டாளர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு இந்தியர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்ப விளையாட்டை தற்காக்கும் நோக்கத்தில் மலேசிய சிலம்பக் கழகம், MIED மற்றும் தேசிய ம.இ.காவின் விளையாட்டுப் பிரிவின் ஒத்துழைப்போடு தேசிய நிலையிலான டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் கிண்ண சிலம்ப போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 13 ஆம்தேதி தொடங்கி செப்டம்பர் 15 ஆம் தேதிவரை லூனாஸ், பாயா பெசார் (Paya Besar) ஸ்ரீ கருமாரியம்மன் மண்டபத்தில் இப்போட்டி நடைபெறவிருக்கிறது.
நாடு முழுவதிலும் சுமார் 300 சிலம்ப விளையாட்டாளர்கள் கலந்துகொள்ளும் இந்த மூன்று நாள் போட்டியை ம.இ.கா தேசியத் தலைவரும் MIED தலைவருமான டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைக்கவுள்ளதாக நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் சுக்மா விளையாட்டுப் போட்டியில் சிலம்பமும் இடம்பெற்றுள்ளதால் அப்போட்டிக்கு நமது சிலம்ப விளையாட்டாளர்களை தயார்படுத்தும் நடவடிக்கையாகவும் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக MIED மற்றும் ம.இ.கா தேசிய விளையாட்டுப் பிரிவின் தலைவர் Andrew கூறினார்.
சிலம்பத்தில் ஈடுபட்ட பலர் ஒழுக்கத்துடன் வாழ்கின்றனர். ஆக ஒருவரின் வாழ்க்கை முறையையே ஒழுங்க்குப்படுத்தும் இந்த பாரம்பரிய தற்காப்புக் கலையில் மேலும் அதிகமான இளைஞர்கள் ஈடுபட வேண்டும். எனவே இந்த முயற்சியினை ம.இ.கா-வின் இளைஞர் பிரிவு முன்னெடுக்க வேண்டும். அதுகுறித்து கோரிக்கை வைக்கும் வகையில், நேற்றைய கூட்டத்தில் ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் அரவிந்தும் அழைக்கப்பட்டு இதுகுறித்து பேசப்பட்டார். இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக இளைஞர் பிரிவும் உறுதியளித்துள்ளது.
இதனிடையே, சிலம்பம் தற்காப்புக் கலைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ,இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் சிலாங்கூர் மாநில அரசுக்கும் Andrew தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.