
செமஞே, ஜனவரி-17 – சிலாங்கூர் செமஞேவில் டத்தோ டி. மோகன் ஏற்பாட்டில் பொங்கல் விழாவின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல், பாரம்பரிய கிராமச் சூழலில் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.
உரி அடித்தல், கயிறு இழுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுடன் மாட்டு வண்டி ஓட்டம், மாவிலைத் தோரணம், அறுசுவை உணவு என விழா களைக் கட்டியது.
ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இருவரும் சிறப்புப் பிரமுகர்களாக கலந்துகொண்டனர்.
மாடுகளைக் குளிப்பாட்டி, பொங்கல் வைத்து, பூஜை செய்ததோடு நிகழ்வுகள் தொடங்கின.
இரண்டாவது ஆண்டாக நடத்தப்பட்ட இக்கொண்டாட்டத்தில் சிறப்பு அம்சமாக, மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில் ஒரு மினி ஜல்லிக் கட்டும் நடத்தப்பட்டது.
ஏராளமான இளைஞர்கள் மாடிபிடிக்கும் போட்டியில் பங்கெடுத்தனர்.
இதற்குக் கிடைத்த பேராதரவு எதிர்பாராதது என, டத்தோ மோகன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
நம் பாரம்பரியத்தையும் கலை-கலாச்சார அம்சங்களையும் அடுத்தத் தலைமுறைக்கும் விட்டுச் செல்வதே இந்த பொங்கல் விழாவின் நோக்கம் என்றார் அவர்.
வரும் ஆண்டுகளில் இக்கொண்டாட்டம் இன்னும் பிரமாண்டமாக நடத்தப்படும் என்றும் அவர் சொன்னர்.
இதனிடையே, பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும் வகையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த டி. மோகனுக்கு தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் பாராட்டுத் தெரிவித்தார்.
இவ்விழா, விரைவில் நம் நாட்டில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு தொடக்கத்திற்கான முன்னோட்டமாக அமையுமென டத்தோ ஸ்ரீ சரவணன் கூறினார்.
கிராமச் சூழலில் பாரம்பரிய மணம் கமழ இப்படி ஒரு பொங்கல் விழாவில் பங்கேற்ற அனுபவத்தை, பொது மக்கள் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.
செமஞே மண்ணில் நடைபெற்ற இந்த பிரமாண்ட மாட்டுப் பொங்கல் விழா, பாரம்பரியத்தின் பெருமையையும் சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தியது.
தமிழர் திருநாளின் சிறப்பை மேலும் மெருகூட்டிய இக்கொண்டாட்டம் அனைவரின் நினைவிலும் பெருமையோடு நிலைத்திருக்கும்.



