
மெட்ரிட், ஆகஸ்ட்-5 – ஸ்பெயின், மெட்ரிட்டிலிருந்து பிரான்ஸின் பாரீசுக்கு புறப்பட்ட வேகத்தில் பெரியப் பறவைக் கூட்டத்தை மோதியதால், பயணிகள் விமானமொன்று புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.
நடுவானில் நிகழ்ந்த இச்சம்பவத்தால் 182 பயணிகளும் கதிகலங்கி போயினர்.
எனினும், அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
ஞாயிறு பிற்பகல் நிகழ்ந்த அச்சம்பவத்தில், அப்புதிய Airbus A321XLR விமானத்தின் மூக்குப் பகுதியும் இயந்திரங்களில் ஒன்றும் சேதமடைந்தன.
அவ்விமானம் சேவையில் ஈடுபடத் தொடங்கி சில வாரங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தின் மூக்குப் பகுதியில் ஓட்டை விழுந்திருப்பதையும், பாதுகாப்புக் கருதி பயணிகள் ஆக்சிஜன் கவசத்தை அணிந்திருப்பதையும் வைரலான வீடியோக்களில் காண முடிந்தது.