
பாலிங், ஜனவரி 21 – பாலிங் Kampung Parit Panjang பகுதிக்கு அருகே, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நகரப் பேருந்து ஒன்று இன்று தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
58 வயதுடைய பேருந்து ஓட்டுநர், பானம் வாங்குவதற்காக வாகனத்தை நிறுத்தியிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே பாலிங் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணி வேளைகளில் களமிறங்கினர்.
மேலும் பேருந்தில் தீ வேகமாகப் பரவி இருந்ததாகவும், உடனடியாக தீ அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தீ ஓட்டுநர் பகுதியிலிருந்து பரவி, பேருந்தின் சுமார் 90 விழுக்காடு பகுதி எரிந்து சேதமடைந்தது எனவும் அப்பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.
வெயிலான வானிலை மற்றும் பேருந்தின் பழைய நிலை தீ வேகமாகப் பரவ காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்பு மதிப்பு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



