Latestமலேசியா

பினாங்கிலிருந்து திரும்பும் வழியில் குறுகியே நேரமே அருண் துரைசாமியை சந்தித்தேன்; குலசேகரன் விளக்கம்

பினாங்கிலிருந்து திரும்பும் வழியில் ஜாவி நீதிமன்ற வளாகத்தில் சமூக ஆர்வலர் அருண் துரைசாமியை தாம் நேரில் சந்தித்தது, ஒரு குறுகிய நிகழ்வே என, சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை துணையமைச்சர் எம். குலசேகரன் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மற்றபடி, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது தாம் உள்ளே இல்லை என அவர் சொன்னார்.

இந்திரா காந்தி குழந்தை வழக்கின் மூலம் அருண் தமக்கு அறிமுகமானவர் என்றும், இன்று காலை சந்தித்த போது “சட்டம் அனைவருக்கும் சமம்; சட்ட நடைமுறையில் நம்பிக்கை வைக்குமாறும்” அவரை அறிவுறுத்தியதாகவும் குலசேகரன் கூறினார்.

அருண், பொது மக்களைத் தூண்டுவதாகக் கருதப்படும் சமூக ஊடகப் பதிவு தொடர்பாக இன்று காலை ஜாவி மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் அவருடன் குலசேகரன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி, பலரது புருவங்களை உயர்த்தின.

அரசாங்கம், அருண் துரைசாமிக்கு ஆதரவளிப்பதாக ஒரு தோற்றத்தை இது ஏற்படுத்தி விடக் கூடுமென அரசியல் விமர்சனங்கள் எழுந்தன.

கோலாலம்பூர் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட சம்ரி வினோத்தின் வழக்கறிஞர்களும் குலசேகரனின் வருகையை கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில், சம்ரி வினோத் நீதிமன்றத்திற்கு கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட நிலையில், அதே பிரிவின் கீழ் பினாங்கில் குற்றம் சாட்டப்பட்ட அருண் துரைசாமிக்கு ஏன் கைவிலங்கு இல்லை என, சம்ரியின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரியான குற்றச்சாட்டைத் தான் எதிர்நோக்கியுள்ளனர்; அப்படியிருக்க சம்ரி ஒரு மாதிரியும், அருண் ஒரு மாதிரியும் நடத்தப்படுவது ஏன்? எதற்கான இந்த இரட்டை நிலைப்பாடு என அவர் கேட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!