
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-6 – சூதாட்ட நடவடிக்கைகளுக்கு நிறுவனத்தின் பணத்தைப் பயன்படுத்திய விஷயம் முதலாளிக்குத் தெரியக்கூடாது என்பதற்காக, ஒரு லாரி ஓட்டுநர் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு, கொள்ளையிடப்பட்டதாக நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பினாங்கு ஜோர்ஜ்டவுன் Jalan Minden 1 சாலையில் நேற்றிரவு 7.45 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
வெகுநேரமாகியும் அலுவலகத்திற்கு திரும்பாததால் முதலாளி கைப்பேசியில் அழைத்து கேட்ட போது, 3 ஆடவர்கள் தம்மைக் கொள்ளையிட்டதாகவும், வயிற்றில் கத்தியால் குத்தி விட்டதாகவும் 32 வயது அந்நபர் கூறியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு முதலாளி ஆட்களை அனுப்பிய நிலையில், அதற்குள் லாரியில் இரத்த வெள்ளத்தில் கிடந்தவரை பொது மக்கள் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
22.5 சென்டி மீட்டர் கத்தி வயிற்றில் பாய்ந்ததில், அவ்வாடவருக்கு 3.5 சென்டி மீட்டர் ஆழத்துக்குக் காயம் ஏற்பட்டிருந்தது.
ஆனால் விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு அங்கு தான் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்நபர் உண்மையில் கொள்ளையிடப்படவும் இல்லை பிறரால் கத்தியால் குத்தப்படவும் இல்லை; மாறாக, நிறுவனத்தின் பணத்தில் தான் கையாடல் செய்த 3,000 ரிங்கிட் கொள்ளைப் போனதாக முதலாளியை நம்ப வைக்கும் நோக்கில், தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டது அம்பலமானது.
இந்நிலையில், காயம் குணமடைந்து தேறியதும் அந்த லாரி ஓட்டுநர் மேல் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தீமோர் லாவோட் போலீஸ் கூறியது.