
ஜோர்ஜ் டவுன், ஆக 22 – மலேசிய எழுமின் அமைப்புடன் பினாங்கு மாநில அரசின் ஆதரவுடன், “வா தமிழா” என்ற கருப்பொருளுடன் 15வது எழுமின் அனைத்துலக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்களின் மூன்று நாள் மாநாடு , பினாங்கு அரங்கத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடந்தது.
இம்மாநாட்டில் மலேசியா, இந்தியா, இலங்கை, மொரிஷியஸ், மத்திய கிழக்கு, அமெரிக்கா, கனடா உட்பட ஏறத்தாழ 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 பேராளர்கள் கலந்துக் கொண்டனர். மாநாட்டின் ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான, டத்தோ சரவணன் சின்னப்பன் வரவேற்புரையுடன், மாநாடு இனிதே துவங்கியது.
உலகளாவிய எழுமின் (The Rise Global) அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவரான அருள்தந்தை ஜெகத் கஸ்பர் தமிழர் சிறப்புகளை முன்வைத்து உரையாற்றினார். தொடக்க விழாவில் பினாங்கு ஆட்சிகுழு உறுப்பினர் டத்தோ சுந்தர ராஜூ, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
பிரதமர் துறை துணையமைச்சர் குலசேகரன் அவர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். அன்றைய தினம் மாலை நிகழ்வில் பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் யோ
(Chow kon Yeow) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையும் வாழ்த்துரையும் வழங்கினார். அவருடன் இந்திய முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ. ராசாவும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பினாங்கில் பிறந்து, உலக அரங்கில் வணிகத்தில் வெற்றி பெற்றிருக்கும் டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை மற்றும் டத்தோ ஸ்ரீ பர்காத் அலி இருவருக்கும் “தமிழரின் பெருமை” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதுதவிர 11 சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த மாநாட்டில் பிரதமர் இலாகாவின் சிறப்பு அதிகாரி திரு. சண்முகம் மூக்கன் கலந்து கொண்டு து உரையாற்றினார்.
மூன்று நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை வணிகம், தொழில் தொடர்பான வல்லுனர்களின் உரைகளும், வெவ்வேறு துறைசார் பேராளர்கள் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வுகளும், சிறுநிதி முதலீட்டார்கள் முன்னர் துவக்கநிலை நிறுவனத் தொழில்முனைவர்கள் தங்கள் தொழில் முன்னெடுப்புகளை விவரிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
16-வது எழுமின் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 8 முதல் 11 வரை, தமிழகத்தில் மதுரையில் நடைபெறும் .