
ஆயிர் ஈத்தாம், நவம்பர்-11,
பினாங்கு, ஆயிர் ஈத்தாமில் உள்ள ராஜாஜி தமிழ்ப் பள்ளியின் மறுநிர்மாணிப்பு விரைவிலேயே புதிய இடத்தில் தொடங்கவுள்ளது.
மாநில அரசே அதற்கு ஒரு நிலத்தை ஒதுக்கியிருப்பதாக, ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜூ தெரிவித்தார்.
தற்போதையப் பள்ளிக் கட்டடம் மாணவர்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை; சில மாதங்களுக்கு முன்பு கூட கட்டடத்தில் நீர் ஒழுகி பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பினாங்கு தமிழ்ப் பள்ளிகளின் சிறப்பு
செயற்குழு உடனடி நிவாரண நடவடிக்கையாக 100,000 ரிங்கிட்டை ஒதுக்கி உரிய பழுதுபார்ப்பை மேற்கொண்டது.
இதுபோன்று அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவதால், 2 வாரங்களுக்கு முன்னர் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங், பினாங்கு மாநகர மேயர் டத்தோ ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதன் போது, பள்ளியின் புதிய கட்டடப் பணிகளை விரைவுபடுத்த இணக்கம் காணப்பட்டதாக சுந்தராஜூ சொன்னார்.
“இது வெறும் கட்டட வேலை அல்ல; தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்கால கல்விக்கான மாநில அரசின் அக்கறையின் அடையாளம்” என்றார் அவர்.



