பிரதமருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் புகைப்படத்தை பதிவேற்றிய பணியாளர் மீது RHB விசாரணை

கோலாலம்பூர், அக் 31 –
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த தனது பணியாளர் ஒருவர் மீது ஆர்.எச்.பி வங்கி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரல் அறிக்கை தனிநபரின் தனிப்பட்ட கருத்துக்களே தவிர , நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என ஆர்.எச்.பி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வங்கி மிக உயர்ந்த தொழில்முறை மற்றும் நேர்மையைப் பேணுவதாகவும், குழுவின் நெறிமுறைகள் மற்றும் நடத்தை விதிகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
RHB கூலிம் கிளையின் ஊழியர் என்று நம்பப்படும் சித்தி நூர்ஸிஸ்வானிஸ் முகமட் ஸைன் (Siti Nurziswanis Mohd Zain) இஸ்ரேல் கொடி வடிவத்துடன் கூடிய ஆடை அணிந்த அன்வாரின் முகத்தைக் காட்டும் திருத்தப்பட்ட புகைப்படத்தைப் பதிவேற்றிய செயல் பரவலான கண்டனத்தை பெற்றது.
அந்த ஊழியரின் இந்த செயல் முரட்டுத்தனமானது மற்றும் பொருத்தமற்றதாக இருப்பதால் இது குறித்து சமூக ஊடக பயணர்கள் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த பெண் முகநூலில் பொது மன்னிப்பு கேட்டுள்ளார்.
தனது செயல்கள் யாரையும் அவமதிக்கும் நோக்கம் கொண்டவை அல்ல என்றும் பின்னர் இந்த பதிவை நீக்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



