
கோலாலாம்பூர், மார்ச்-18-டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டதும், மலேசியப் பிரதமராக நியமிக்கப்பட்டதும் செல்லாது என அறிவிக்கக் கோரி, MAP கட்சித் தலைவர் பி.வேதமூர்த்தி தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வாதியின் விண்ணப்பத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதோடு, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதால், வழக்கை தள்ளுபடி செய்வதாக கோலாலாம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
கூட்டரசு அரசியலமைப்பின் 118-வது பிரிவின் படி, தேர்தல் முடிவு குறித்தோ அல்லது மக்களவை உறுப்பினர் தேர்வு குறித்தோ ஆட்சேபம் இருந்தால், தேர்தல் பெட்டிஷன் முலம் வழக்குத் தொடுப்பதே முறையானதாகும் என நீதிபதி சுட்டிக் காட்டினார்.
சிறையிலிருந்த அன்வாருக்கு 2018-ல் அரச மன்னிப்பு வழங்கப்பட்ட போது, தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டதாக எந்த இடத்திலும் கூறப்படவில்லை.
எனவே, 2022 பொதுத் தேர்தலில் தம்புன் தொகுதியில் அவர் வெற்றிப் பெற்றதும் பின்னர் நாட்டின் 10-ஆவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது என அறிவிக்கக் கோரி வேதமூர்த்தி நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
எனினும் நீதிமன்றத்தின் இந்றையத் தீர்ப்பு, அன்வாரின் பிரதமர் பதவியை உறுதிப்படுத்துகிறது.



