
கோலாலாம்பூர், அக்டோபர்-10,
அண்மையில் கோலாலாம்பூர் பிரிக்பீல்ட்ஸில் அமைந்துள்ள புதிய உணவக வளாகம் அருகே அலங்கார குளத்தில் கால் தடுக்கி விழுந்த மாது ஒருவருக்கு காலில் முறிவு மற்றும் இடது காது கிழிந்து, முகத்திலும் பலத்த காயமமேற்பட்டது.
இதனிடையே, இதே போன்ற நிலைமை இந்நிலையில் தனக்கேற்பட்ட இந்த நிலைக்கு யார் பொறுப்பேற்பது, இனி வரும் காலங்களில் வேறு எவருக்கும் இதே போன்ற பாதிப்பு வராமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அவர் வினவியுள்ளார்.
சுமூகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்ற நல்ல எண்ணத்தில், ஒவ்வொரு தரப்பையும் முறையாக அணுகி முயற்சி செய்தார்; ஆனால் போன இடத்தில் எல்லாம் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது; உணவகம், கட்டட உரிமையாளர், வரைபடத்திற்கு அனுமதி கொடுத்த தரப்பு என சம்பந்தப்பட்ட எல்லாருடைய படியேறியவருக்கு அழைக்கழித்தல் தான் பதிலாக இருந்தது.
தங்கள் பக்கம் தவறில்லை என்பதைக் காட்டிக் கொள்வதிலேயே அத்தரப்புகள் முனைப்புக் காட்டின. எனவே இனியும் பொறுத்துக் கொள்ள முடியாமல், வணக்கம் மலேசியா செய்தி ஊடகத்தின் உதவியை நாடியிருக்கின்றார் அவர்.
பாதிக்கப்பட்டவருக்கோ, இனியும் அது போன்று நடக்கக் கூடாதே என்கிற கவலை; நடுத்தர வயதில் தனக்கே, அங்கு குளமிருந்தது தெரியவில்லை…குளம் இருப்பதற்கான எச்சரிக்கைப் பலகைகளும் அங்கில்லை.
விசாரித்துப் பார்த்ததில், தன்னைப்போன்று இன்னும் சிலர் இப்படி விழுந்த்திருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாக கூறுகிறார் அவர்….
தமக்காவது காயத்தோடு முடிந்தது, இதே சூழ்நிலையை குழந்தைகளும் வயதானவர்களும் எதிர்கொண்டால் நிலைமை என்னாவது என அவர் வினவினார்.
எனவே, தான் அனைவருக்கும் ஒரு முன்னெச்சரிக்கையாகவும் பாடமாகவும் இருக்கட்டும் என்பதற்காக, முதன் முறையாக இதனை சமூக ஊடக வெளிச்சத்துக்கு அவர் கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், ஏற்பட்ட காயங்களுக்கும் அதனால் தனக்கும் குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் நியாயமான இழப்பீட்டையும் இவர் கேட்கிறார்.
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பது போல, சம்பந்தப்பட்ட தரப்புகள் இழப்பீட்டுக்கு இணங்காமல் இழுத்தடிக்கும் பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார்.