
பெய்ஜிங், செப்டம்பர்-3 – வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பிரிக்ஸ் (BRICKS) அமைப்பில் மலேசியா முழு அங்கத்துவம் பெறுவதை சீனா ஆதரிப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
மலேசியா சீக்கிரமே முழு உறுப்பினராவதை சீன அதிபர் சீ சின் பிங் (Xi Jinping) விரும்புகிறார்; பெய்ஜிங் அரசாங்கக் கட்டடத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது சீ சின் பிங் அதனைத் தெரிவித்ததாக அன்வார் சொன்னார்.
பிரிக்ஸ் போன்ற அமைப்புகள் மூலம் உலக அரங்கில் பங்களிக்க மலேசியாவுக்கு பெரிய நாடுகளின் ஆதரவு கிடைப்பது ஒரு கௌரவம் என பிரதமர் வருணித்தார்.
4 நாள் சீன வருகையின் போது மலேசிய செய்தியாளர்களிடம் அன்வார் அவ்வாறு பேசினார்.
2009-ஆம் ஆண்டு உருவான பிரிக்ஸ் அமைப்பு தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய 10 நாடுகளை முழு அங்கத்தினர்களாகக் கொண்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் 40 விழுக்காட்டை பிரிக்ஸ் பிரதிநிதிக்கிறது.
இந்நிலையில் அவ்வமைப்பில் உறுப்பினர் அல்லாத 13 பங்காளி நாடுகளில் ஒன்றாக மலேசியா கடந்தாண்டு மத்தியில் அங்கீகரிக்கப்பட்டது.