Latestஉலகம்

பிரிக்ஸ் நாணயமா? அப்படியொரு திட்டமேதும் இல்லை என்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர்

புது டெல்லி, டிசம்பர்-8 – அமெரிக்க டாலருக்குப் போட்டியாக புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தும் முடிவேதும் எடுக்கப்படவில்லை என, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தவோ அல்லது அமெரிக்க டாலருக்கு மாற்றாக இன்னொரு நாணயதைத் ஆதரிக்கவோ கூடாது என, பிரிக்ஸ் (BRICKS) நாடுகளுக்கு, அமெரிக்க அதிபராகவுள்ள டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த ஒரு வாரத்தில், ஜெய்சங்கரின் கருத்து வெளியாகியுள்ளது.

வளர்ந்து வரும் பொருளாதாரங்களான இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான நிலைபாட்டை எடுக்கும் எந்தவொரு திட்டத்தையும் இந்தியா ஆதரித்ததில்லை, ஆதரிக்கப் போவதுமில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, டிரம்ப்புக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் அணுக்கமான நல்லுறவு உண்டு.

எனவே, அடுத்த மாதம் மீண்டும் வெள்ளை மாளிக்கைக்குள் நுழையும் டிரம்புடன் இந்தியா மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமென்பது, கற்பனைக்கும் எட்டாத சாத்தியமென ஜெய்சங்கர் சொன்னார்.

அமெரிக்க டாலரின் மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கையில் பிரிக்ஸ் ஈடுபட்டால், அதன் உறுப்பு நாடுகளுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்படுமென டிரம்ப் முன்னதாக எச்சரித்திருந்தார்.

டாலருக்கு எதிரான கீழறுப்பு வேலையில் ஈடுபட்டால் அந்தந்த நாடுகள் வீண் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்வதற்கு அர்த்தமென, ஜனவரி 20-ஆம் தேதி முறைப்படி அதிபராகப் பதவியேற்கவுள்ள டிரம்ப் மிரட்டியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!