தானா மேரா, செப்டம்பர் 4 – கடந்த ஞாயிற்றுக்கிழமை அறியாமல் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் நுழைந்த ஏழு மலேசியர்களை மீட்கும் நடவடிக்கையில், அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து கிழக்கு சபா பாதுகாப்புத் தளபதி கமாண்டர் விக்டர் சாஞ்ஜோசிடமிருந்து (Victor Sanjos) தகவல் கிடைக்கப் பெற்றதாக அவர் கூறினார்.
பயணிகளை ஏற்றிச் சென்ற படகுகள் மலேசியக் கடற்பரப்பிலிருந்து வெளியே சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனால், அவற்றை நிர்வகித்த சுற்றுலா நிறுவனத்தையும் அடையாளம் காணுவதாக அவர் தெரிவித்தார்.
முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் இரண்டு படகுகளில் பிலிப்பைன்ஸ் எல்லைக்குள் நுழைந்த 15 பேரையும், அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சிட்டாங்காய் (Sitangkai) கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் குடிநுழைவு பணியக ஆணையர் நோர்மன் தான்சிங்கோ (Norman Tansingco) தெரிவித்திருக்கிறார்.