
சுங்கை பூலோ, மார்ச்-24 – மே மாத பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
அது குறித்து கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தாம் முன்கூட்டியே தெரியப்படுத்தியிருப்பதாக அவர் சொன்னார்.
உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விருப்பம் தொடர்பில் நாடளாவிய நிலையில் உள்ள கட்சித் தலைவர்கள், சகப் போராளிகள், அடிமட்ட தொண்டர்கள் ஆகியோருடன் நன்கு கலந்தாலோசித்துள்ளேன்.
அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரையில் கட்சியை வலுப்படுத்துவதே எனது நோக்கம் என, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் கூறினார்.
மலேசியா மடானி உணர்வுடன் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு உழைப்போம் என்றார் அவர்.
கடந்த வாரம் தான் சுங்கை பூலோ பி.கே.ஆர் தொகுதித் தலைவராக ரமணன் போட்டியின்றி தேர்வுப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
15-ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை பூலோவில் கைரி ஜமாலுடினைத் தோற்கடித்து giant killer என பட்டப் பெயரைப் பெற்ற டத்தோ ஸ்ரீ ரமணன், தொழிமுனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்த மூன்றாண்டுகளில் அரசியலில் ஏறுமுகத்தைச் சந்தித்து வரும் ரமணனுக்கு இந்த உதவித் தலைவர் போட்டியானது, கட்சியில் அவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மற்றொரு சவாலாகும்.