
கோத்தா கினபாலு, ஆகஸ்ட் 14 – சாரா கைரினா மகாதீரின் தாயார் தனது மகளின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்ட பின்னர் உடனடியாக பிரேத பரிசோதனைக்கு சம்மதிக்குமாறு கேட்டபோது, தாம் சரியான மனநிலையில் இருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் தங்களுக்குத் தெளிவான விளக்கம் எதுவும் தரப்படவில்லை என்றும் பிரேத பரிசோதனை நடைமுறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தேவையான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருந்தால், பிரேத பரிசோதனையை மறுக்கும் படிவத்தில் நாங்கள் ஒருபோதும் கையொப்பமிட்டிருக்க மாட்டோம் என்று சாராவின் தயார் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (CID) இயக்குநர் டத்தோ எம். குமார், பிரேத பரிசோதனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியின் பின்னடைவை ஒப்புக்கொண்ட பின்னர் மருத்துவமனை வழங்கிய பிரேத பரிசோதனை ரத்து ஆவணத்தில் அம்மாணவியின் தாயார் கையொப்பமிட்டதாகவும் தெரிவித்தார்.
சாராவின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர், அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்க்து.