
கோலாலம்பூர், ஜனவரி 7 – புக்கிட் பிந்தாங் பகுதியில் உள்ள Jalan Walter Granier சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுகாதார விதிமுறைகளை மீறியதாக 8 வணிக நிறுவனங்களை மூட கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL உத்தரவிட்டுள்ளது.
DBKL வெளியிட்ட அறிக்கையில், அந்தப் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் மளிகைக் கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு 13 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நடத்தப்பட்ட ஆய்வில் வணிக உரிமம் இன்றி செயல்பட்டல், உணவு கையாளுபவர்கள் டைபாய்டு தடுப்பூசி பெறாதது, சமையலறை தரை மிகவும் அழுக்காக இருப்பது போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டன. மேலும், சமையலறை மற்றும் உணவு சேமிப்பு பகுதிகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் எலிகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதற்கு கூடுதலாக, உணவுப் பொருட்களை polisterin பெட்டிகளில் வைத்தல், மூலப்பொருட்களை தரையில் வைப்பது, உணவு கையாளுபவர்கள் apron மற்றும் தலைக்கவசம் அணியாதது போன்ற விதிமுறை மீறல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த காரணங்களால், சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் கடைகள் மூடப்பட்டன. பொதுமக்களுக்கு விற்கப்படும் உணவு சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதே DBKL-ன் முன்னுரிமை என்றும், விதிமுறைகளை மீறிய எந்தக் கடையையும் விட்டு வைக்கமாட்டோம் என்றும் DBKL தெரிவித்துள்ளது.



