காசாவிலிருந்து மக்களை வெளியேற்றும் டிரம்ப்பின் திட்டத்துக்கு அரபு நாடுகள் எதிர்ப்பு

கெய்ரோ, பிப்ரவரி-2 – போரினால் சீரழிந்த காசவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றும் எந்தவொரு திட்டத்தையும் நிராகரிப்பதாக, எகிப்தில் கூடிய அரபு நாடுகள் அறிவித்துள்ளன.
ஜோர்டான், ஐக்கிய அரபு சிற்றரசு, சவூதி அரேபியா, கட்டார், எகிப்து, பாலஸ்தீன அதிகாரத் தரப்பு ஆகியவற்றுடன் அரபு லீக்கும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அனைத்துலகச் சட்டத்திற்கு ஏற்ப தங்கள் சொந்த மண்ணில் பாலஸ்தீன மக்களுக்கு இருக்கும் உரிமைகளை தாங்கள் ஆதரிப்பதாக, அவை தெளிவுப்படுத்தின.
எக்காரணம் கொண்டும் அவ்வுரிமை மறுக்கப்படக் கூடாது.
குடியேற்ற நடவடிக்கைகள், வெளியேற்றம், வீடு இடிப்பு, நில அபகரிப்பு, கட்டாயமாக இடமாற்றம் செய்தல் என, என்ன பெயர் வைத்து அழைத்தாலும், அதற்கு தாங்கள் ஒப்புக் கொள்ளப் போவதில்லை என அந்த அரபு நாடுகள் திட்டவட்டமாகக் கூறின.
அத்தகையத் திட்டங்கள் வட்டார நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, மோதலை அதிகரித்து மக்களின் அமைதி மற்றும் சகவாழ்வுக்கான வாய்ப்புகளைக் கெடுத்து விடும் என அவை அச்சம் தெரிவித்தன.
பாலஸ்தீனர்களை எகிப்து, ஜோர்டான் போன்ற நாடுகளில் மறுகுடியேற்றம் செய்யலாமென்ற தனது பரிந்துரையை, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து, அரபு நாடுகள் கெய்ரோவில் சனிக்கிழமைக் கூடி விவாதித்தன.
என்ற போதிலும், இரு நாடுகளின் தீர்வு மற்றும் வட்டார மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் அடிப்படையில் மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை அடைய டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற ஆறு நாடுகளும் தங்கள் விருப்பத்தை தெரிவித்தன.