
அலாஸ்கா, ஆகஸ்ட்-19- அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், யுக்ரேய்ன் அதிபர் வோளோடிமிர் Zelenskyயை வெள்ளை மாளிகைக்கு வரவேற்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதற்கான வழி வகைகள் குறித்து விவாதிக்க அச்சந்திப்பு நடைபெற்றது.
பிப்ரவரியில் அதே இடத்தில் ட்ரம்புக்கும் Zelenskyக்கும் இடையிலான கடைசிச் சந்திப்பு பெரும் சர்ச்சையில் முடிந்தது; ட்ரம்புடன் நேருக்கு நேர் வாக்குவாத்ததில் ஈடுபட்டதால், ஒரு கட்டத்தில் Zelensky வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்டார்.
5 மாதங்களுக்குப் பிறகு, அதே இடத்தில் இரு தலைவர்களும் சந்திப்பதால் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்ற ஐயம் நிலவிய நிலையில், ஒருவழியாக அது சுமூகமாக நடந்து முடிந்துள்ளது.
இவ்வேளையில், அச்சந்திப்புக்குப் பிறகு பேசிய ட்ரம்ப், Zelensky புட்டின் இருவருக்கும் இடையில் நேரடி சந்திப்புக்கு தாம் ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
அது குறித்து புட்டினுடன் தொலைபேசியில் பேசியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
புட்டினைச் சந்திப்பதில் தமக்குப் பிரச்சனை இல்லையெனக் கூறிய Zelensky, அது நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டுமென்றார்.
கடந்த வாரம் ட்ரம்பைச் சந்தித்த புட்டின், யுக்ரேய்ன் – ரஷ்யா போர் நிறுத்தத்தில் தமக்கு பொதுவில் உடன்பாடே என்றும், ஆனால், நடுவில் திரை மறைவில் சிண்டு முடிக்கும் வேலையில் ஐரோப்பியத் தலைவர்கள் ஈடுபடக் கூடாது எனக் கூறியிருந்தார்.