
ஜோகூர் பாரு, ஏப்ரல்-17, ஜோகூர் பாருவில் போலீஸ் துரத்திய போது புதரில் புகுந்தோடிய வெள்ளை நிற Mitsubishi Triton பிக்கப் லாரி ஓட்டுநர் தேடப்பட்டு வருகிறார்.
27 வயதான சந்தேக நபர், BSI எனப்படும் சுல்தான் இஸ்கண்டார் கட்டிடத்தில் சாலைத் தடுப்புச் சோதனையிலிருந்து தப்பிச் செல்லும்போது போலீஸாருடன் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக, தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறினார்.
செவ்வாய்க் கிழமை இரவு 8.50 மணியளவில் BSI போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் பேருந்து செல்லும் பாதையில் பணியில் ஈடுபட்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
அனுமதிக்கப்படாத பாதையைப் பயன்படுத்தியதற்காக சந்தேக நபரின் வாகனத்தை போலீஸார் நிறுத்திய போது, அவர் தப்பியோடினார்.
அவரைத் துரத்திக் கொண்டு 7 கிலோ மீட்டர் தூரம் வரை 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் MPV வாகனத்தில் போலீஸார் பின் தொடர்ந்தனர்.
சோதனையின் போது, சந்தேக நபர் திடீரென ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டினார்; பின்னர் சாலையோரமாக அதனை நிறுத்தி விட்டு, புதரில் ஓடி மறைந்ததாக, ரவூப் சொன்னார்.
அவர் விட்டுச் சென்ற பிக்கப் லாரியில் ஒரு கோப்ல்ப் மட்டையும், 18 சென்டிமீட்டர் கத்தியும் கண்டெடுக்கப்பட்டன.
போதைப் பொருள் உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் ஏற்கனவே 8 குற்றப் பதிவுகளை அந்நபர் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.
முன்னதாக வைரலான 14 வினாடி வீடியோவில், வெள்ளை நிற பிக்கப் லாரி, பின்னால் ரிவர்ஸ் செய்து, தன்னை நிறுத்த முயலும் ஒருவரிடமிருந்து தப்பிக்க முயலுவதைக் காண முடிந்தது.