Latest

புதிய அமெரிக்க-மலேசிய வர்த்தக ஒப்பந்தம் 19% வரி விகிதத்தை நிலைநிறுத்தியது; 1,700 க்கும் மேற்பட்ட மலேசிய ஏற்றுமதிகளுக்கு விலக்கு

கோலாலம்பூர், அக்டோபர்-27,

அதிபர் டோனல்ட் ட்ரம்பின் வருகையின் மூலம் அமெரிக்காவுடன் மலேசியா புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

அதன்படி, மலேசிய ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட 19 விழுக்காடு வரி விகிதம் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்படும்.

ஆனால் 1,700-க்கும் மேற்பட்ட முக்கிய பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, முதலீடு-வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தெங்கு சாஃப்ருல் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.

இந்த வரிவிலக்கு பெற்ற பொருட்களில் செம்பனை எண்ணெய், ரப்பர், கொக்கோ, விமான உதிரிப்பாகங்கள் மற்றும் மருந்துகளும் அடங்கும்.

இவை மொத்தம் 5.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஏற்றுமதிகளை உள்ளடக்கியுள்ளன – இது மலேசியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 12 விழுக்காடாகும்.

இந்த ஒப்பந்தம் ஏற்கனவே செய்யப்பட்ட உடன்பாடுகளை மாற்றாது, ஆனால் அமெரிக்க சந்தையில் மலேசியாவுக்கு மேலும் சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.

இவ்வேளையில், மலேசியாவும் அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் அரிய தாது பொருட்களுக்கு ஏற்றுமதி தடைகள் அல்லது ஒதுக்கீடுகள் விதிக்காது என ஒப்பந்தத்தில் உறுதியளித்துள்ளது.

இவ்வொப்பந்தம், மலேசியாவின் உலகளாவிய வர்த்தக முன்னேற்றத்தையும், முக்கிய பொருளாதார துறைகளில் வளர்ச்சியையும் வலுப்படுத்தும் முக்கியமான ஒரு படியாக பார்க்கப்படுகிறது.

47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற வந்த டோனல்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் கையெழுத்தான இந்த மலேசிய– அமெரிக்கா புதிய வர்த்தக ஒப்பந்தம், பொருளாதார உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!