
சியோல். தென் கொரியா, ஜனவரி 6 – ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு புதிய மனிதவடிவ ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரோபோ 2028 முதல் ஹூண்டாயின் உற்பத்தி நிலையங்களில், பயன்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக, வாகனத்தின் பாகங்களை வரிசைப்படுத்துவது போன்ற மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகளை இந்த ரோபோ மேற்கொள்ளும். அதன் பின்னர், 2030க்குள் மேலும் சிக்கலான பணிகளிலும் இதனைப் பயன்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
இந்த ரோபோ மனிதர்களைப் போல செயல்படும் கைகளையும் தொடுதல் உணர்வு தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இது 50 கிலோ வரை எடையை தூக்கக்கூடியது என்றும் -20°C முதல் 40°C வரை உள்ள வெப்பநிலைகளிலும் செயல்பட முடியும் என்றும் அறியப்படுகின்றது.
ஆண்டுக்கு 30,000 ரோபோக்கள் வரை உற்பத்தி செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்புக்குப் பிறகு நிறுவனத்தின் பங்குகள் தென் கொரியாவில் உயர்ந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களில் முதலீட்டை அதிகரித்து, தொழிற்சாலைகளின் திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது தான் ஹூண்டாயின் இலக்காக உள்ளது.



