கோலாலம்பூர், ஜனவரி-2 – தலைநகரில் 2025 புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற 3 முக்கிய இடங்களில், 3.62 டன் எடையிலான குப்பைகளை Alam Flora அகற்றியுள்ளது.
முதல் நாள் இரவு 10 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணி வரையில், புக்கிட் பிந்தாங், டத்தாரான் மெர்டேக்கா, KLCC ஆகிய 3 இடங்களில் அக்குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
கடந்தாண்டு 3.06 டன் எடைக் குப்பைகள் சேகரிக்கப்பட்ட நிலையில், இது 18 விழுக்காடு அதிகமென, Alam Flora தலைமை செயலதிகாரி Shariman Yusuf Mohamed Zain தெரிவித்தார்.
ஆக அதிகமாக, டத்தாரான் மெர்டேக்காவில் 1.67 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
அந்த குப்பைச் சேகரிப்புப் பணி சுமூகமாக நடைபெற ஏதுவாக, துப்புரவுப் பணியாளர்கள், குப்பை லாரி ஓட்டுநர்கள், நிர்வாகப் பணியாளர்கள் என 141 ஊழியர்கள் அதில் ஈடுபட்டனர்.
சிறந்த திடக் கழிவு மேலாண்மைக்காக 3 லாரிகள் பயன்படுத்தப்பட்ட வேளை, சாலையோரங்கள் குறிப்பாக டத்தாரான் மெர்டேக்காவில் தண்ணீரைப் பாய்ச்சி சுத்தம் செய்யப்பட்டதாக Shariman கூறினார்.
தவிர, 660 லிட்டர் கொள்ளளவு கொண்ட 24 பெரியக் குப்பைத் தொட்டிகளும் தோதுவான இடங்களில் வைக்கப்பட்டன.
வருகையாளர்களின் எண்ணிக்கைப் பற்றி கவலையில்லாமல், தலைநகரில் குப்பை அகற்றும் பணிகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளும் கடப்பாட்டை Alam Flora தொடருமென்றார் அவர்.