Latestமலேசியா

புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்புக்கு மண் தோண்டல் காரணமா? விசாரிக்கப்படுமென போலீஸ் உறுதி

பூச்சோங், ஏப்ரல்-2- சிலாங்கூர், பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ் பகுதியில் 500 மீட்டர் நீள எரிவாயுக் குழாய் வெடிப்பினால் பெரும் தீ ஏற்பட்ட சம்பவத்துக்கான உண்மைக் காரணம் கண்டறியப்படும்.

பெட்ரோனாஸ் நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்ட நிலத்தில் வெளியாரால் மண் தோண்டப்பட்டதாக வைரலாகி வரும் குற்றசாட்டும் விசாரிக்கப்படும்.

நேற்று ஒரு நாள் முழுவதும் மீட்புப் பணிகளுக்கும் தீயை அணைப்பதிலுமே முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில், இன்று முதல் விசாரணைத் தொடங்கும் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் தெரிவித்தார்.

தீயணைப்பு மீட்புத் துறையும் பெட்ரோனாசும் விரிவான சோதனையும் விசாரணையும் நடத்துமென அவர் சொன்னார்.

ஒரு வேளையே உண்மையிலேயே மண் தோண்டல் நடந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு என்பதையும் கண்டுபிடிப்போம் என்றார் அவர்.

முன்னதாக சம்பவ இடத்திற்கு பிரதமருடன் வந்திருந்த சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியிடமும் அந்த வைரல் குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், பல்வேறு யூகங்கள் வெளியாகியுள்ளன; அவற்றை விரிவாக விசாரிக்க முதலில் அதிகாரத் தரப்புக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.

தொடக்கக் கட்ட விசாரணை அறிக்கை 72 மணி நேரங்களில் நிறைவுப்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணையின் முடிவில், அச்சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யாரென்று தெரிய வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமிருடின் உறுதியளித்தார்.

இதனிடையே அத்தீயில் பாதிக்கப்பட்ட வீடுகளை இன்று முதல் TNB-யும் பொதுப் பணித் துறையும் பரிசோதனை செய்யும்.

அவை இனியும் குடியிருக்கப் பாதுகாப்பானவையா என்பதை மதிப்பீடு செய்வதே அதன் நோக்கமென, டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.

விரிவான பரிசோதனையும் மதிப்பீடும் முடிந்த பிறகே, பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது முடிவாகும் என்றார் அவர்.

முன்னதாக, தீயில் அவ்வளவாகப் பாதிக்கப்படாத வீடுகளிலிருந்து மருந்து மாத்திரைகள், ஆவணங்கள் உள்ளிட்ட முக்கியமானப் பொருட்களை மட்டும் எடுத்து வர ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இருவர் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்ட வீடுகளில் வெளியார் சூறையாடியதாக இதுவரை புகாரேதும் இல்லை என்றும் டத்தோ ஹுசேய் உறுதிப்படுத்தினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!