
புத்ராஜெயா, ஏப்ரல்-10, கூடுதல் வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளதை, மலேசியா பெரிதும் வரவேற்றுள்ளது.
தற்காலிகமே என்றாலும், மலேசியப் பொருளாதாரத்திற்கு இது நிம்மதியைத் தந்திருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்றத் துறை அமைச்சில் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் நடத்திய நோன்புப் பெருநாள் உபசரிப்பில் கலந்துகொண்ட போது, டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து பிரதமர் அவ்வாறு சுருக்கமாக பதிலளித்தார்.
சீனாவைத் தவிர்த்து, மற்ற 75 நாடுகளுக்கான பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு ஒத்தி வைப்பதற்காக இன்று அதிகாலை டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்காவின் இந்த திடீர் மனமாற்றத்தால் 24 விழுக்காட்டு ‘பரஸ்பர’ வரி விதிக்கப்பட்ட மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கான வரி விகிதம் பழையபடி 10 விழுக்காட்டுக்கே திரும்புகின்றது.
சந்தை எதிர்வினைகள் மற்றும் பத்திர செயல்திறனைக் கண்காணித்து வந்ததன் அடிப்படையில், வரி உயர்வை தாமதப்படுத்த முடிவுச் செய்துள்ளதாக டிரம்ப் கூறினார்.
பாதிக்கப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இந்த 3 மாதக் காலக்கட்டத்தை அவர் பயன்படுத்திக் கொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.
என்ற போதிலும், சீனாவுக்குக்கான வரியை வரலாறு காணாத வகையில் 125 விழுக்காட்டுக்கு டிரம்ப் உயர்த்தியுள்ளார்.
வாணிப ஒப்பந்தத்திற்கு உரிய மரியாதை கொடுக்காமல் சீனா அடம்பிடிப்பதாகவும், எனவே அந்த ‘தவற்றுக்கு’ பாடம் கற்பிக்க வேண்டியிருப்பதாகவும் டிரம்ப் கூறிக் கொண்டார்.