
பூச்சோங், ஏப்ரல்-9, பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு கைப்பேசி சேவைக் கட்டண விலக்கு அளிக்கப்படும்.
முன் கட்டண (prepaid) மற்றும் பின் கட்டண (postpaid) சேவைகளை அது உள்ளடக்கியிருப்பதாக, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இந்த இக்கட்டான சூழலில் அவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், நாட்டின் முதன்மை தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களான, CelcomDigi, Maxis, TM Unifi, U Mobile, Yes ஆகியவை அச்சலுகையை வழங்குகின்றன.
இன்று நடத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அவர் அதனை அறிவித்தார்.
கட்டண விலக்கு தவிர, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சிம் அட்டைகளை இலவசமாக மாற்றித் தருதல், புத்ரா ஹைய்ட்ஸ் தற்காலிக நிவாரண மையத்தில் இலவச 5G இணையச் சேவை உள்ளிட்ட உதவிகளையும் அந்நிறுவனங்கள் வழங்க முன் வந்துள்ளன.
நிறுவனங்களுக்கு நிறுவனங்கள் அவ்வுதவிகள் மாறுபடலாம்; அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றில் மாற்றம் செய்யப்படலாம் என்றார் அவர்.
சம்பந்தப்பட்டவர்கள், PPS மையத்தில் உள்ள நடமாடும் கைப்பேசி சேவை முகப்புகளுக்குச் சென்றோ, hotline தொலைப்பேசி எண்ணுக்கு அழைத்தோ அல்லது அருகிலுள்ள கிளை அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ உதவியைப்பெறலாம் என ஃபாஹ்மி சொன்னார்.