
பூச்சோங், ஏப்ரல்-12- சிலாங்கூர், பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ் பகுதியில் நிலத்தடி எரிவாயுக் குழாய் வெடித்து ஏற்பட்ட பெருதீயில் பாதிக்கப்பட்ட இடங்களில், இன்று பேரளவிலான துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
600 தன்னார்வலர்கள், பல்வேறு அரசு நிறுவனங்களின் பணியாளர்கள் என மொத்தமாக 4,000-க்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்றனர்.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் தொடங்கிய இந்த 2-நாள் துப்புரவுப் பணிகள், புத்ரா ஹைய்ட்ஸ் மற்றும் பக்கத்தில் உள்ள கம்போங் குவாலா சுங்கை பாருவை உட்படுத்தியுள்ளன.
பொது இடங்கள் மற்றும் கம்போங் குவாலா சுங்கை பாருவில் உள்ள குடியிருப்புகளை சுத்தம் செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்படுவதாக, அமிருடின் செய்தியாளர்களிடம் கூறினார்.
பல்வேறு தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில், 264 வாகனங்களும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
தண்ணீர் ஜெட் லாரிகள், தண்ணீர் டாங்கிகள், RORO டிரக் லாரிகள், மண்வாரி இயந்திரங்கள், சாலையைக் கூட்டிப் பெருக்கும் துடைப்பங்கள், மரங்களை வெட்டும் இயந்திரங்கள், skylift இயந்திரங்களும் அவற்றிலடங்கும்.
இதுவரை, 307 வீடுகள் மீண்டும் குடியிருப்பதற்காக சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
சுத்தம் செய்யும் பணிகள் நாளை முடிந்ததும், மேலும் ஏராளமான வீடுகள் குடியிருப்பாளர்களுக்குத் தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமிருடின் சொன்னார்