
பூச்சோங், ஏப்ரல்-2- பூச்சோங், புத்ரா ஹைய்ட்ஸ், ஜாலான் ஹார்மோனி புத்ராவில் எரிவாயுக் குழாய் வெடித்து ஏற்பட்ட பெருந்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவசர உதவிகளை அறிவித்துள்ளார்.
அவ்வகையில் முற்றாக சேதமடைந்த வீடுகளுக்கு, அவற்றின் உரிமையாளர்களுக்கு 5,000 ரிங்கிட் வழங்கப்படும்.பகுதி சேதமடைந்த வீடுகளுக்குத் தலா 2,500 ரிங்கிட் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, சேதமுற்ற வீடுகளுக்கு மாற்று வீடுளை வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு, மாநில அரசு, மற்றும் பெட்ரோனாஸ் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளும் என்றார் அவர்.
அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து குடியிருப்பாளர்களுடன் கலந்தாலோசிக்குமாறு, சம்பந்தப்பட்ட அனைத்து அரசு நிறுனங்களும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வெடிப்பு ஏற்பட்ட பள்ளத்திற்கு நேற்று மாலை நேரில் வருகை மேற்கொண்டு நிலவரத்தைக் கண்காணித்த பிறகு, டத்தோ ஸ்ரீ அன்வார் அதனை அறிவித்தார்.
காலையிலிருந்து தீயை அணைக்கப் போராடியத் தீயணைப்பு – மீட்புப் படையினருக்கும் இதர பாதுகாப்புப் படையினருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துத் கொண்டார்.
அதே சமயம், தீயில் பாதிக்கப்பட்ட குடிருப்பாளர்களுக்குத் தற்காலில நிவாரணம் வழங்கிய புத்ரா ஹைய்ட்ஸ் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்திற்கும் அருகிலுள்ள மசூதிக்கும் பிரதமர் நன்றித் தெரிவித்தார்.
கஷ்ட காலத்தில் இதுபோல் ஒருவொருக்கொருவர் உதவிக்கொள்வது முக்கியமென்றார் அவர்.
இவ்வேளையில், பிரதமரின் துணைவியார் டத்தின் ஸ்ரீ Dr வான் அசிசா வான் இஸ்மாயில், அத்தீ விபத்தில் காயமடைந்து செர்டாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
காயடைந்தவர்கள் அனைவரும் சீக்கிரமே குணமடைய பிரதமர் தம்பதியர் பிராத்தித்தனர்.
நேற்றைய அச்சம்பவத்தில் தீப்புண் காயங்கள் பட்டும் அனல் காற்றை சுவாசித்ததாலும் மொத்தம் 305 பேர் பாதிக்கப்பட்ட வேளை, 237 வீடுகள் சேதமடைந்தன.
275 கார்களும் 56 மோட்டார் சைக்கிள்களும் முழுமையாக எரிந்துபோயின.
பாதுகாப்புக் கருதி வீடுகளை விட்டு வெளியேறியக் குடியிருப்பாளர்கள், தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீடுகள் குடியிருக்கப் பாதுகாப்பானவையே என உறுதிச் செய்யப்படும் வரை, அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என போலீஸ் தெரிவித்துள்ளது