
கோலாலம்பூர், மார்ச்-5 – 9,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான கடனைத் தீர்ப்பதற்காக, சொந்த மகளையே ah long எனப்படும் வட்டி முதலையிடம் விற்று விட்டதாக, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு தந்தை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலியல் சேவைகளைக் கோரி, 21 வயது மகளுக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்த போதே தந்தையின் இழிவானச் செயல் அம்பலமானது.
நடந்தவற்றை நினைவுகூர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் மாற்றான் தந்தையான 50 வயது லாய், பிப்ரவரி தொடக்கத்தில், தனது மனைவி மற்றும் மாற்றான் பிள்ளைக்கு வட்டி முதலையிடமிருந்து மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும், அவர்கள் 9,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான கடனைத் திருப்பிச் செலுத்தக் கோரி வற்புறுத்தியதாகவும் கூறினார்.
“பிறகுதான் தெரிந்தது எனது மனைவியின் முன்னாள் கணவர், ah long-கிடம் கடன் வாங்கி, எங்களுக்கே தெரியாமல் எங்களின் பெயர்களை உத்தரவாததாரர்களாகப் பயன்படுத்தினார் என்று”
“என் மனைவியும் அவரின் முன்னாள் கணவரும் விவாகரத்து பெற்று 11 ஆண்டுகளாக தொடர்பில் இல்லை என்ற போதிலும், அவர் தைரியமாக அவ்வாறு செய்துள்ளார்” என லாய் குறிப்பிட்டார்.
பணம் கேட்டதோடு நிறுத்தாமல், WhatsApp-பில் போதைப் பொருள் என நம்பப்படும் வெள்ளை நிறப் பொருளின் புகைப்படத்தை அனுப்பி, எங்கள் வீட்டில் புதைத்து விடுவோம் என ah long மிரட்டினர்.
அதை விட மோசமாக, என் மாற்றான் மகளின் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பதிவேற்றி ‘200 ரிங்கிட்டுக்கு சேவை’ என்ற அநாகரீகமான வாசகத்தை அவர்கள் வைத்திருந்தார்கள் என லாய் வருத்ததுடன் கூறினார்.
நேற்று விஸ்மா எம்.சி.ஏ கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இதனால் மாற்றான் மகள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், குடும்பத்தின் பாதுகாப்புக் கருதி போலீஸில் புகார் செய்திருப்பதாகவும் சிலாங்கூர், பூச்சோங்கில் வசித்து வரும் அவர் சொன்னார்.