
சுபாங் ஜெயா, ஜூலை 23 – பெர்சியாரன் பூச்சோங் பெர்மாயில் நேற்று சாலையோர மோதலின் போது, கடன் பிரச்சனை காரணமாக ஆடவர் ஒருவரைக் கடத்திய குற்றத்தில் ஈடுபட்ட உள்ளூர் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பூச்சோங்கில் ஒரு கும்பல் பாதிக்கப்பட்டவரை லாரியில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்வதைக் கண்ட பொதுமக்களில் ஒருவருக்குக் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து அந்நபர் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மமட் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 32 வயது சந்தேக நபரும் அவரது மூன்று நண்பர்களும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது என்றும் அவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடத்தப்பட்ட அந்த பாதிக்கப்பட்டவரை போலீசார் வெற்றிகரமாக மீட்டுள்ளனர், கடத்தல் சம்பவத்தின் காணொளி வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் அவனுக்கு இரண்டு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதும் அவன் ஒரு ரகசிய குண்டர் கும்பலுடன் தொடர்புடையவன் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.