
கோலாலம்பூர், மார்ச்-8 – தொழில்நுட்பத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகில் எல்லா துறைகளிலும் பெண்களின் பங்கு அளப்பரியது.
சவால் மிக்க இக்காலக்கட்டத்தில் பெண்கள் பல்வேறு வழிகளில் தங்களை வளர்த்துக்கொண்டு பீடுநடை போடுவது மகிழ்ச்சியைத் தருவதாக, ம.இ.கா தேசிய தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் கூறினார்.
இந்நிலையில் பெண்கள்
எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்; அதுவே அவர்களின் வெற்றிக்கான அடித்தளம் என, இன்று கொண்டாடப்படும் அனைத்துலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் வலியுறுத்தினார்.
ஆண்களுக்கு எவ்விதத்திலும் சளைக்காத பெண்கள், தங்களது திறமைகளை முழுமையாக அறிந்து, வெளிப்படுத்த வேண்டும்.
அதே நேரம், பொருளாதார சுயநிலைத்தன்மையும் அவர்களுக்கு முக்கியம்.
தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்திச் செய்யும் அதே வேளை, குடும்பத்திற்கும் ஏன் சமூகத்திற்குமே கூட உதவ, பொருளாதார ரீதியாகவும் அவர்கள் வலுவாக இருக்க வேண்டும் என விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
வேலை வாய்ப்புகள், தொழில்முனைவு, முதலீடு உள்ளிட்ட விவகாரங்களிலும் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்;
குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஆதரவாக இருந்து வரும் பெண்களை மகளிர் தினத்தில் மட்டுமன்றி எல்லா காலத்திலும் போற்ற வேண்டும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.