
கோலாலம்பூர், பிப்ரவரி-6-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் முக்கிய அரசியல் மாற்றமாக, அதன் தலைமைப் பொறுப்பை பாஸ் ஏற்க பெர்சாத்து தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் ஒப்புக் கொண்டுள்ளார்.
அந்த முன்னாள் பிரதமர் எந்த நிபந்தனையும் இல்லாமல் நேர்மறையான பதில் அளித்ததாக, பாஸ் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார்.
இந்த தலைமைத்துவ மாற்றம் பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறவுள்ள பெரிக்காத்தான் உச்ச மன்றக் கூட்டத்தில் உறுதிச் செய்யப்படும்.
கூட்டணியின் தற்போதைய அமைப்பு, குறிப்பாக தலைவர் பதவி, தொடர வேண்டும் என்றும், PN தலைவர் இயல்பாகவே அடுத்த பிரதமர் வேட்பாளராகக் கருதப்படக் கூடாது என்றும் துவான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், பெரிக்காத்தான் தலைவர் பதவியை ஏற்க ஒரு மூத்த தலைவரை ஏற்கனவே தேர்வு செய்துள்ளதாக பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் உறுதிப்படுத்தினார்.
பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் அல்லது திரங்கானு மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சம்சூரி மொக்தார் ஆகியோர் சாத்தியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
இந்த மாற்றம் பாஸ் கட்சியின் செல்வாக்கை கூட்டணியில் மேலும் வலுப்படுத்தும் என்பது நிச்சயம்.
ஆனால், மலாய்-இஸ்லாம் கொள்கைகளில் பாஸ் கட்சியின் கடுமையான நிலைப்பாட்டால், மலாய் அல்லாத வாக்காளர்களை பெரிக்காத்தானிலிருந்து விலக்கி விடும் எனம, கெராக்கான் மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP போன்ற சிறிய கூட்டணி கட்சிகள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளன.
எது எப்படியோ, இந்த தலைமைத்துவ மாற்றம் 16-ஆவது பொதுத் தேர்தலுக்கான பெரிக்காத்தானின் பெரிய மாற்றத்தை குறிக்கிறது.



