Latestமலேசியா

பெர்சாத்துவில் தீவிரமடையும் பிளவு; முஹிடின் இல்லத்தில் ஆதரவாளர்கள் கூட்டம், ஹம்சா ஒழுங்குக்குழு விசாரணைக்கு அழைப்பு

டாமான்சாரா, பிப்ரவரி-9-பெர்சாத்துவில் உட்பூசல் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சித் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின், தனது புக்கிட் டாமான்சாரா இல்லத்தில் சிறப்பு சந்திப்பை நடத்தியுள்ளார்.

அந்தக் கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்தத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி, உதவித் தலைவர்களான Radzi Mohd Jidin, Ahmad Faizal Azumu ஆகியோரும் அடங்குவர்.

இந்தச் சந்திப்பு ரமலான் விருந்தாகக் கூறப்பட்டாலும், துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின் மற்றும் அவரின் ஆதரவாளர்களை அங்குக் காணவில்லை.

அழைப்பில்லையா அல்லது அவர்கள் செல்லவில்லையா என்பது தெரியவில்லை.

இதற்கிடையில், கோத்தா செப்பூத்தே சட்டமன்ற உறுப்பினர் அஷ்ரஃப் முஸ்தாகிம், ஹம்சா இன்னும் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என விளக்கினார்.

ஆனால் அவர் கட்சியின் கட்டொழுங்குக் குழுவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

2025 பொதுப்பேரவையை சீர்குலைக்க முயன்றதாகவும், கட்சித் தலைமைக்கு எதிராக உறுப்பினர்களைத் தூண்டி விட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

வரும் வியாழக்கிழமையன்று ஹம்சாவுடன் சேர்ந்து சில தொகுதித் தலைவர்கள் மற்றும் சபா பெர்சாத்து தலைவர்களும் விசாரணைக்கு வரவுள்ளனர்.

முன்னதாக, ஹம்சாவின் நடவடிக்கைகளால் முஹிடின் பொறுமை இழந்திருப்பதாகவும், எனவே அவர் விரைவிலேயே கட்சியிலிருந்து நீக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் கட்டொழுங்குக் குழுவின் முடிவு, ஹம்சாவின் அரசியல் எதிர்காலத்தையும், கட்சியின் நிலைத்தன்மையையும் தீர்மானிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!