
பெர்செக்குத்துப் பிரிவின் 30,000 உறுப்பினர்களின் ஆதரவும் முஹிடினுக்கே; சஞ்சீவன் முழக்கம்
கோலாலம்பூர், பிப்ரவரி-18,
பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் 30,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் பிளவுப்படாத ஆதரவும், கட்சித் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசினுக்கே என, அப்பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் முழங்கியுள்ளார்.
பிரிவின் தலைவர் Dr Chong Fatt Full பதவி விலகுவதாக அறிவித்தாலும், பெர்செக்குத்து வலிமையுடன் திகழ்வதாக அவர் சொன்னார்.
“Dr Chong உள்ளிட்ட எந்தவொரு தனிநபரின் விலகலையும் நாங்கள் மதிக்கிறோம்; அது அவரவர் தேர்வு; அரசியல் கட்சிகளில் உறுப்பினர்கள் சேருவதும் விலகுவதும் சகஜமான ஒன்றே” என சஞ்சீவன் கூறினார்.
ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்றாலும், தலைமைத்துவத்தை சிதைக்க முயற்சிகளை அனுமதிக்க முடியாது.
அவை கடுமையாக எதிர்க்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பெர்சாத்து முதிர்ச்சியாகவும், தொழில்முறையாகவும் தொடர்ந்து முன்னேறிச் செல்ல ஏதுவாக, அதன் போராட்டம் கட்டிக் காக்கப்படும் என்றார் அவர்.
பெர்சாத்து துணைத் தலைவராக இருந்த டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் கட்சி விதிகளை மீறியதாகக் கூறி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டதை எதிர்த்து, Dr Chong முன்னதாக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.



