குளுவாங், டிசம்பர்-3 – ஜோகூர், குளுவாங், கம்போங் தெங்காவில் சொந்த மகள் மீதே கொதிக்க கொதிக்க சுடுநீரை கொட்டியத் தாய் கைதாகியுள்ளார்.
அதில் 10 வயது அச்சிறுமியின் முதுகுப் பகுதி கடுமையாக வெந்துபோனது.
அம்மாணவிக்கு நேர்ந்த கொடுமையை அவள் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் கண்டுபிடித்தார்.
சந்தேகத்தில் மாணவியை மேற்கொண்டு பரிசோதித்ததில், அவளது வலது காலும் இடது கன்னமும் வீங்கியிருந்ததோடு, இடது கால் வெந்துபோயிருந்ததும் கண்டு தலைமையாசிரியரே போலீசில் புகார் செய்தார்.
தாய் செய்து வந்த கொடுமைகளால் சிறுமியின் உடல் முழுக்கக் காயங்கள் ஏற்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவளது முதுகில் வெந்துபோன காயம் மெல்ல குணமடைந்து வருகிறது.
32 வயது தாய், 2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக 6 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குளுவாங் போலீஸ் கூறியது.