கோலாலம்பூர், நவம்பர்-13 – சுங்கை பீசி இராணுவ முகாமில் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டிருந்த தமக்கு, அங்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறி மூத்த தன்முனைப்புப் பேச்சாளர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று துன் டெம்ளர் மண்டபத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில், ஆயுதப் படையின் ஆலோசகப் பிரிவைச் சேர்ந்தவர் என நம்பப்படும் அதிகாரி கடுஞ்சொற்களால் தம்மை திட்டியதாக, ஓய்வுப் பெற்ற இராணுவ வீரருமான 56 வயது மேஜர் Qayyum Badaruddin தனது புகாரில் கூறினார்.
UPNM எனப்படும் மலேசியத் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்தின் இராணுவப் பயிற்சி முகாமைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தன்முனைப்பு சொற்பொழிவாற்ற தயாரான போது தமக்கு அந்த அவமரியாதை ஏற்பட்டதாக அவர் சொன்னார்.
“என்னுடையை பேச்சு மாலை 4 மணிக்குத் தொடங்கியிருக்க வேண்டும்; ஆனால் எனக்கு முன் பேசிய அந்த அதிகாரி 4.20 மணி வரை பேச்சை இழுத்தடித்து விட்டார். எனக்கு அடுத்து இன்னொரு அலுவல் இருப்பதால் அவரின் பேச்சு எப்போது முடியும் என்று தான் கேட்டேன். ஆனால் அவரோ, உன் முகத்தில் குத்தி விடுவேன், வா வெளியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற அளவுக்கு கத்தி கூப்பாடு போட்டு விட்டார்” என Qayyum சொன்னார்.
அதோடு 200 மாணவர்கள் முன்னிலையில் என் கழுத்தைப் பிடித்து இழுத்து, ஓரமாகத் தள்ளி விட்டார்.
நான் ஓய்வுப் பெற்ற இராணுவ வீரராக இருக்கலாம்; ஆனால் நிகழ்ச்சிக்கு முறைப்படி அழைக்கப்பட்ட பேச்சாளர். என்னை அப்படி நடத்தலாமா என Qayyum கேட்டார்.
அச்சம்பவத்துக்கு பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரியோ அல்லது மற்ற அதிகாரிகளோ நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.