
தாப்பா, ஏப்ரல்-21, பேராக்கில் செயல்பட்டு வரும் அனைத்து 85 பன்றிப் பண்ணைகளும் மாநில அரசிடமிருந்து முறையாக பெர்மிட் அனுமதிப் பெற்றவை.
அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாமென, மனிதவளம், சுகாதாரம், இந்தியர் விவகாரம் ஆகியத் துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் தெரிவித்தார்.
பன்றிப் பண்ணையாளர்களுடன் 3 மாதங்களுக்கு ஒரு முறை சந்திப்பும் நடத்துகிறோம் என்றார் அவர்.
மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆயர் கூனிங் போன்ற இடங்களில் ஏராளமான பன்றிப் பண்ணைகள் இருப்பதாகவும், இது சுகாதாரத்திற்கும் சுற்று வட்டாரத்திற்கும் கேடு என்றும் பெரிக்காத்தான் நேஷனல் முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தது.
ஏராளமான பன்றிப் பண்ணைகள் சட்டவிரோதமாக இயங்கி வருவதாக, பாஸ் கட்சியின் உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மாட் கூறியிருந்தார்.
அதனை முற்றாக மறுத்த சிவநேசன், இது ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி எதிர்கட்சிகள் செய்யும் விஷம பிரச்சாரம் என்றார்.
பார்க்கப் போனால் ஆட்சிக்கு வந்த இந்த 26 மாதங்களில், 25 விழுக்காட்டுப் பன்றிப் பண்ணைகளை நாங்கள் மூடியுள்ளோம்.
ஆயர் கூனிங்கில் கூட வெறும் 9 பன்றிப் பண்ணைகளே உள்ளன; அவற்றில் 3 பண்ணைகளுக்கு, நவீன வளர்ப்பு முறைக்கான பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 6 பண்ணைகளும் விரைவில் அந்த பெர்மிட்டைப் பெறக் கூடும்.
எனவே, அரசியல் ஆதாயத்திற்காக உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாமென சிவநேசன் கேட்டுக் கொண்டார்.
பேராக், தாப்பா நாடாளுமன்றத்திற்குட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 26-ல் இடைத்தேர்தல் நடக்கிறது