
கோலாலாம்பூர், செப்டம்பர்-2 – ஆட்சியாளர்கள், உயரதிகாரிகள் மற்றும் விஐபிக்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள், பணியிலிருக்கும்போது தயார்நிலையை மேம்படுத்த ஏதுவாக, சிறப்பு பாதுகாப்புப் பயிற்சிகள் அவர்களுக்குக் கட்டாயமாகும்.
பேராக் மாநில அளவிலான தேசிய தின கொண்டாட்டத்தின் முதன்மை மேடையில் பெண்ணொருவர் அத்துமீறி நுழைந்து பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவை அணுக முயன்ற சம்பவத்தைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுல்தான் மற்றும் மாநில ஆளுநர்கள் உட்பட அனைத்து மாநிலத் தலைவர்களுக்கான பாதுகாப்பின் அம்சங்கள் அதிகரிக்கப்படுமென, தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் கூறினார்.
அரண்மனை மற்றும் மாநில அரசாங்கத்திற்கு நியமிக்கப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் UTK எனப்படும் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு மற்றும் கமாண்டோக்களின் கூறுகளை இணைப்பதன் மூலம் மெய்க்காப்பாளர் பயிற்சி நெறிப்படுத்தப்படும் என்றார் அவர்.
இவ்வேளையில், தேசிய தினத்தன்று நடந்த சம்பவத்தின் போது அலட்சிய அம்சங்களை அடையாளம் காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துணை உறுப்பினர்கள் மீது ஒழுங்கு விசாரணைத் தொடங்கியுள்ளது.
இவ்வேளையில் சந்தேக நபரான 41 வயது பெண் மீது போலீசார் இன்னும் விசாரணையைத் தொடருகின்றனர்.
அவருக்கு எதிராக போதைப்பொருள் வழக்குகள் மற்றும் மனநல சிகிச்சை தொடர்பான கடந்த கால பதிவுகள் இருப்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என IGP சொன்னார்.
அப்பெண் 3 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.