
ஈப்போ, செப்டம்பர்-4 – ஈப்போவில், மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது பேராக் சுல்தானை நோக்கி ஓடி, அவரைப் பின்னாலிருந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண், தொடர் கண்காணிப்புக்காக உலு கிந்தா Hospital Bahagia மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
41 வயது அம்மாதுவின் 3 நாட்கள் தடுப்புக் காவல் நேற்று முடிவடைந்ததே அதற்குக் காரணம்.
விசாரணை முடிந்திருப்பதால், 2001 மனநல ஆரோக்கியச் சட்டத்தின் கீழ் அவ்வாறு செய்யப்பட்டதாக, பேராக் போலீஸ் தலைவர் Datuk Noor Hisam Nordin கூறினார்.
விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக புத்ராஜெயாவில் உள்ள தேசிய சட்டத் துறை அலுவலகத்தில் இன்று சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை தேசிய தின அணிவகுப்பு நடைபெற்ற சமயம், முதன்மை மேடையில் இரண்டாவது வரிசையிலிருந்த அப்பெண், திடீரென சுல்தான் நஸ்ரின் ஷாவை நோக்கி ஓடி அவரைப் பிடித்துக் கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதையடுத்து படுகாயம் விளைவிக்க முயன்றதன் பேரில் அவர் கைதானார்.
போதைப்பொருள் தொடர்பான பழையக் குற்றப்பதிவை அவர் கொண்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையில், மனநல சிகிச்சைப் பெற்றதும் தெரிய வந்தது.