
கோலாலம்பூர், ஜனவரி 6 – மலேசிய இந்து சங்கம், 2026 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி அன்று கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இவ்வாண்டு தை மாதம் ஜனவரி 14 ஆம் தேதியன்று, மலேசிய நேரம் இரவு 9.23 க்கு பிறக்கின்றது. இதன் அடிப்படையிலேயே பொங்கல் விழா அடுத்த நாள் கொண்டாடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மலேசிய தமிழர்கள் காலை 6.10 முதல் 7.20 மணி வரையிலும், காலை 9.10 முதல் 11.30 மணி வரையிலுமுள்ள சுபநேரங்களில் பொங்கல் வைக்கலாமென்று மலேசிய இந்து சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நேரங்கள் பாரம்பரிய வழிபாட்டிற்கு உகந்ததாகக் கருதப்படுகின்றன.
மாலை நேரத்தில் பொங்கல் வழிபாட்டை மேற்கொள்ள விரும்புவோர், மாலை 4.20 முதல் 6.20 மணி வரை உள்ள சுபநேரத்தில் பொங்கல் வைக்கலாமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக பொதுமக்கள் இந்த சுபநேரங்களை பின்பற்றி, பொங்கல் விழாவைச் சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகை அல்லது தமிழர் திருநாள், இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி கூறும் முக்கிய தமிழர் விழா என்பது குறிப்பிடத்தக்கது.



