
கோலாலம்பூர், பிப்ரவரி-20 – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் Dr சா’க்கிர் நாயக்கிற்கு பொது இடங்களில் சொற்பொழிவாற்ற தடையேதுமில்லை என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு குறித்து, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சு அம்முடிவை மறுஆய்வு செய்து, சா’க்கிர் மீதான தடையை மீண்டும் அமுல்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
அக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்துப் போராடப் போவதாக, வணக்கம் மலேசியாவிடம் ராயர் தெரிவித்தார்.
2019-ஆம் ஆண்டில் சா’க்கிருக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது உண்மைதான்; ஆனால் அது இப்போது அமுலில் இல்லையென உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசுத்தியோன் இஸ்மாயில் முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தார்.
மக்களவையில் ராயர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் அதனைத் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் இன நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்காக 2019-ஆம் ஆண்டு சா’க்கிர் நாயக்கிற்கு அந்தத் தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் பெர்லிஸில் ஒரு மாநாட்டில் சா’க்கிர் உரையாற்றியதாக செய்திகள் வெளியாகின.
எனவே, அவர் மீது இன்னமும் தடை உள்ளதா இல்லையா என ராயர் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.