
கோலாலாம்பூர், ஜூலை-2 – நாட்டில் தாதியர் பற்றாக்குறை மிக மோசமான நிலையிலிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் கூறியிருப்பது, காலத்திற்கேற்ற நினைவூட்டலாகும்.
மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் அவ்வாறு கூறியுள்ளார்.
2020 முதல் தாதியர்கள், மருத்துவ அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உட்பட 6,900 மருத்துவப் பணியாளர்கள் வேலையிலிருந்து விலகியுள்ளனர்.
இதுவொரு மிகப் பெரிய எண்ணிக்கையாகும்; களத்தில் அவர்கள் எதிர்நோக்கியுள்ள மோசமான வேலை அழுத்தத்தை இது பிரதிபலிக்கிறது.
இப்பிரச்னையை வைத்துகொண்டு, வாரத்திற்கு 45 மணி நேர வேலை முறையை அமுல்படுத்த பொதுச் சேவைத் துறையான JPA முயலுகிறது.
இது உணர்ச்சியைப் புரிந்துகொள்ளாத செயல் என்பதோடு ஆபத்தானதாகும் என, லிங்கேஷ்வரன் சுட்டிக் காட்டினார்.
இப்பரிந்துரை தொடரப்பட்டால், சுகாதார பராமரிப்புத் துறையைச் சேர்ந்த இன்னும் ஏராளமானோர் வேலையை விட்டுச் செல்வர் என்றும் அவர் எச்சரித்தார்.
அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், நாட்டின் சுகாதாரப் பராமரிப்புத் துறை செயலிழக்கும்; அதற்கு JPA தான் பொறுப்பேற்ற வேண்டுமென்றார் அவர்.
பல தாதியர் சங்கங்களிடம் பேசியதில், உரிய ஊக்கத் தொகையோ அல்லது தங்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டாலோ, வேலையில் நீடிப்பது கஷ்டம் என அவர்கள் கூறியதாக லிங்கேஷ் சுட்டிக் காட்டினார்.
உற்சாகம் குறைந்துள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு, தற்போது ஆதரவும் ஊக்கமும் தேவை; அதை விடுத்து மேலும் மேலும் சுமையை அதிகரிப்பது நியாயமல்ல.
அரசாங்க மருத்துவமனைகள் செயல் இழக்கும் வரை காத்திருக்காமல், இப்போதே உரியவற்றை JPA செய்ய வேண்டுமென அறிக்கையொன்றில் Dr லிங்கேஷ்வரன் வலியுறுத்தினார்.