
பொறுமை இழக்கும் முஹிடின்? விரைவிலேயே ஹம்சா நீக்கப்படலாம்
கோலாலம்பூர், பிப்ரவரி-8,
பெர்சாத்து கட்சியில் உட்பூசல் வெடித்துள்ள நிலையில், அதன் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் விரைவிலேயே கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹம்சாவின் செயல்பாடுகளினால் முஹிடின் பொறுமை இழந்திருப்பதாகவும், அவரின் நீக்கமே அனைத்திற்கும் தீர்வாக இருக்குமென்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின.
முஹிடின் தலைமைத்துவத்திற்கு எதிராக தொகுதித் தலைவர்கள் உட்பட கட்சிக்குள் பலர் தொடர் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.
இந்த சமயத்தில் தலைவருக்கு விசுவாசமாகவும் அவரைத் தற்காக்க வேண்டிய முதல் ஆளாக இருக்க வேண்டியவருமான ஹம்சா மௌனம் காத்து வருகிறார்.
இதனால், முஹிடினுக்கு எதிராக கட்சியினரைத் தூண்டி விடுவதே ஹம்சா தான் என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
எனவே, துணைத் தலைவரே ‘புல்லுருவியாக’ இருக்க அனுமதிக்கக் கூடாது என, அண்மையில் முஹிடினுடன் கலந்துரையாடலில் கலந்துகொண்ட பெர்சாத்து தலைவர்கள் பலர் கருத்துத் தெரிவித்தனர்.
ஹம்சாவையும், பின்னால் இருந்து அவர் இயக்குவதாகக் கூறப்படும் எஞ்சிய பெர்சாத்து தலைவர்களையும் களையெடுத்து விட்டு, கட்சியை மீண்டும் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே முஹிடினின் திட்டம் எனக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக உள்ள ஹம்சா அப்படி உண்மையிலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டால், பெர்சாத்து உட்பூசல் முடிவுக்கு வருமா? அல்லது அக்கட்சியிலும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலும் புதியப் பிரச்னை வெடிக்குமா என்பதே பார்வையாளர்களின் கவனமாக உள்ளது.



