
கோலாலம்பூர், அக்டோபர் 28 – வணிக துறையில் இந்தியப் பெண்களை முன்னேற்றும் இலக்கோடு கடந்த ஏப்ரல் மாதம், அறிமுகப்படுத்தப்பட்டது 50 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அமானா இக்தியார் மலேசியா நிறுவனத்தின் ‘பெண்’ திட்டம்.
இத்திட்டத்தில் இதுவரை 2,644 பெண் தொழில்முனைவோருக்கு 22.71 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
எஞ்சிய பணமும் இவ்வாண்டு இறுதிக்குள் முடித்து விட வேண்டுமென இன்று நடைபெற்ற பெண் திட்டத்தின் காசோலை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
பேராக் மாநிலத்திலிருந்து 818 பெண்களும், சிலாங்கூரிலிருந்து 535 பேரும், பஹாங்கைச் சேர்ந்த 292 பெண் தொழில்முனைவர்களும் பயனடைந்துள்ளதாக அவர் கூறினார்.
இவ்வேளையில், இத்திட்டத்தின் வாயிலாகக் கடனுதவி பெற்றவர்களும் அதனை முறையாகச் செலுத்தி வருவதையும் அவர் சுட்டுக்காட்டினார்.
அமானா இக்தியாரின் பெண் திட்டம், இந்தியப் பெண்களின் உருமாற்றத்திற்கு வழிவகுத்து, அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதைக்கு முன்னேற வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்று பெண் திட்டத்தின் காசோலை வழங்கும் நிகழ்ச்சியில், அமானா இக்தியாரின் தலைமை இயக்குநர் டத்தோ ஷாமிர், துணையமைச்சரின் முதன்மை அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன், மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன், அதன் மகளிர் பிரிவுத் தலைவர் ஹேமலா உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.