
கோலாலம்பூர், ஜனவரி 12 – கண்டோமினியங்களைப் போதைப்பொருள் செயலாக்கம் மற்றும் சேமிப்புக்காக பயன்படுத்தி வந்த போதைப்பொருள் கும்பலின் திட்டத்தை கோலாலம்பூர் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
அவர்கள் சுமார் 832,350 ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில், கடந்த ஜனவரி 7 ஆம் தேதியன்று போதைப்பொருள் குற்ற விசாரணை துறை (JSJN) நடத்திய மூன்று சோதனைகளில், 29 வயதுடைய உள்ளூர் ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பறிமுதல் செய்யப்பட்டபோதைப்பொருட்கள் சுமார் 3,768 பேர் பயன்படுத்தக்கூடிய அளவிளானது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தற்போது ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இவ்வழக்கை ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்து மேல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதே நேரத்தில், 146,507 ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்த பறிமுதலின் மதிப்பு 978,857 ரிங்கிட் ஆகும் என கூறப்பட்டுள்ளது.



